ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ, தலையாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை
காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் ராஜகோபால் (52). இதே அலுவலகத்தில் தலையாரியாக பணியாற்றி வருபவர் சாந்தி (57). தளக்காவூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரிடம், நான்குமால் அடங்கல் வழங்குவதற்காக ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சக்திவேல் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தங்கராமன் தலைமையில், ஆய்வாளர்கள் கண்ணன், ஜேசுதாஸ் மற்றும் உதவி ஆய்வாளர் கோகிலா உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சக்திவேலிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சப் பணத்தை வி.ஏ.ஓ., ராஜகோபால் மற்றும் சாந்தி பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இருவரையும் சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து இருவரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.