வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம் திமுக உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாததால் பரபரப்பு
காரைக்குடி, செப்.1- காரைக்குடி மாநகராட்சி சாதாரண மற்றும் அவசர மாமன்ற கூட்டம் ஆணையாளர் பாலு மேயர் பொறுப்பு குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் மாமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை மன்றத்தில் சத்தமாக கூறி ஆணையாளர் மேயர் பொறுப்பு மேயரிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் மாமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தாமல் டெண்டர் விடும்பணிக்கு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே அந்த தீர்மானத்தை மன்றம் அனுமதிக்க கூடாது எனவும் ஆணையாளரை முற்றுகையிட்டு உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்தனர். மேலும் அதிகாரிகள் டெண்டர் விடாமலேயே குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். உடனடியாக அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவேசமாக கூறி வாக்குவாதம் செய்தனர். மாநகராட்சி மேயர் முத்துதுரை உடல்நிலை காரணமாக தொடர்ந்து மூன்று கூட்டங்களுக்கு கலந்து கொள்ளவில்லை எனவே அவர் மன்ற விதிகளின்படி தானாகவே பதவி இழப்பார் என தீர்மானம் கொண்டுவரப்பட்டதற்கு திமுக பெண் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதம் செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்ற சில திமுக உறுப்பினர்கள் திமுக பெண் உறுப்பினர்களுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தவெக உறுப்பினர் விஷ்ணு பெருமாள் மன்றத்தில் தொகுதி அமைச்சர் படத்தை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு திமுக பெண் உறுப்பினர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து அவருடன் வாக்குவாதம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவ்வாறு உறுப்பினர்களின் வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் மாமன்ற கூட்டம் தொடர்ந்து தொடங்கி நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி நிவர்த்தி செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டனர். கூட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த போது காரைக்குடி உதவி காவல் கண்கானிப்பாளர் ஆஷிஷ் புனியா வருகை தந்து கலந்து கொண்டார். அப்போது உறுப்பினர் மெய்யர் இதுவரை மன்ற கூட்டத்திற்கு காவல் துறை அதிகாரி வந்ததில்லை. நீங்கள் வந்துள்ளது மகிழ்ச்சி இருந்தாலும் காவல் துறை அதிகாரி வந்ததால் இங்கு எதுவும் பிரச்சனை இருக்கிறா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறிய உதவி கண்காணிப்பாளர் மன்ற கூட்டம் நடப்பதை பார்வை இட்டு கோரிக்கை ஒன்றை கூற வந்துள்ளேன். நகரில் உள்ள பூங்கா பகுதியில் குப்பைகள் உள்ளது அதை அகற்ற வேண்டும் மேலும் மாநகராட்சி பகுதியில் சி.சி.டி.வி., கேமரா வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.