பதவி இழக்கும் காரைக்குடி மேயர் தொடர்ந்து 3 முறைமாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்காததால் தீர்மானம்
காரைக்குடி, செப்.1- காரைக்குடி மாநகராட்சி கூட்டத்தில் திமுகவை சேர்ந்த மேயர் முத்து துரை தொடர்ந்து 3 கூட்டங்களில் பங்கேற்காதநிலையில், அவர் பதவி இழக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காரைக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் (பொ) குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் பாலு முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் சிலர் பேசுகையில், தங்களுக்கு தெரியாமலேயே ஒப்பந்தப்புள்ளி பணிக்கு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், அந்த தீர்மானத்தை நிறைவேற்ற கூடாது. மேலும் வேலை உத்தரவு வழங்காமலேயே பணிகள் நடக்கின்றன. அதை அனுமதிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறி ஆணையரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. திமுகவைச் சேர்ந்த மாநகராட்சி மேயர் முத்துத்துரை உடல்நிலை பாதிப்பால், பிப்.13, மார்ச் 10, ஜூன் 24 ஆகிய 3 கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்கவில்லை. இதனால், இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1996 பிரிவு 32(1) (j)-ன்படி தொடர்ந்து 3 கூட்டங்களில் மாநகராட்சி மேயர் பங்கேற்கவில்லை என்றால் பதவி இழக்க நேரிடும். மேலும், பிரிவு 32(4)-ன்படி கவுன்சிலராக பதவியில் மீண்டும் தொடர அனுமதிக்கலாம் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மேயராக முத்துத்துரை தொடர வேண்டுமென கூறி, இத்தீர்மானத்துக்கு திமுக உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாமன்ற கூட்டத்தில் திமுக 20 உறுப்பினர்கள், அதிமுக - 7, காங் - 3, கம்யூனிஸ்ட் - 1, சுயே - 2 பேர் என 33 பேர் கலந்து கொண்டனர். 1 பெண் சுயேச்சை உறுப்பினர் மட்டும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை