ரூ 2500 எங்களுக்கு வேண்டாம்
காரைக்குடி அருகே மித்திராவயல் கிராமத்தில் அரசு மதுபான கடை (கடை எண் 7653) செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மது அருந்திவிட்டு கிராமத்து இளைஞர்கள் அதிக அளவில் சாலை விபத்திலும் உடல் பாதிப்பு ஏற்பட்டு பலியாகி உள்ளதால் மாவட்டத்தில் இந்த கிராமத்தில் ஏராளமான இளம் விதவைகள் இருக்கின்றனர். குடிப்பழக்கத்தால் ஆண்பிள்ளைகளுக்கு பெண் தர பிற ஊர்களை சேர்ந்தவர்கள் மறுப்பதால் பலர் திருமணம் ஆகாமல் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மது அருந்திவிட்டு ஏராளமானோர் உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் நோயாளிகளாகவும், பெற்ற பிள்ளைகளையும், மனைவியையும் பெற்றோர்களை தாக்குதாகவும் இந்த கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த கடையை அகற்றக்கோரி 15 ஆண்டு காலமாக மக்கள் போராடி வருகின்றனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு 35 நாட்கள் இந்த மதுகடையை மூடக்கோரி முற்றுகை, தொடர் போராட்டம் நடத்தியும் பலன் இல்லாமல் மீண்டும் அரசு அதே இடத்தில் மதுக்கடையை மீண்டும் திறந்தது. இந்நிலையில் இன்று அந்த பகுதி பெண்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு அதை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதி பெண்கள் கூறும்போது, அரசு மதுபான கடையை அகற்றினால் போதும். 2500 ரூபாய் பணமும் வேண்டாம் வேறு எந்த இலவசமும் வேண்டாம், என்றனர். சாக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் மற்றும் வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படாததால் கடை அருகிலே தொடர்ந்து போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டு வருவதால் மதுக்கடை அடைக்கப்பட்டுள்ளது.