காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சை
காரைக்குடி கண்ணன் பஜார் பகுதியில் நள்ளிரவில் நடைபெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரைக்குடியின் முக்கிய வணிகப் பகுதியான கண்ணன் பஜார் வீதியில் அதிவேகமாக வந்த இரண்டு விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த சித்திக் என்ற இளைஞர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் பலத்த காயமடைந்தார் உடனடியாக அவர் மீட்கப்பட்டு காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காரைக்குடி தெற்கு காவல்துறையினர், உயிரிழந்த சித்திக் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விபத்து அதிவேகம் காரணமாக நடந்ததா அல்லது கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்டதா என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.