பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது
தேவகோட்டை, அக்.2- சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகர் காவல் நிலைய காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, தேவகோட்டை அருகே சிலம்பணி ஊரணி பகுதியில் ஒருவர் வாளுடன் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அங்கு வாளுடன் சுற்றித்திரிந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் தேவகோட்டை, வள்ளியப்ப செட்டியார் ஊரணி பகுதியைச் சேர்ந்த சூர்யா(19) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்த வாளை காவல்துறையினர் பறிமுதல் செய்து, அவர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சூர்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.